Wednesday, October 31, 2012

மைக்ரோசொப்ட் ஸ்தாபகர் பில்கேட்ஸ் வாழ்க்கை வரலாறு


மைக்ரோசொப்ட் ஸ்தாபகர் பில்கேட்ஸ் வாழ்க்கை வரலாறு




அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகப் பார்ப்போம் .

அமெரிக்காவிலே சியாடில் என்ற ஓர் அழகிய அற்புதமான இயற்கை எழில் கொஞ்சும் நகரில் வாழ்ந்து வந்த வில்லியம் ஹென்றி கேட்ஸ் மேரி தம்பதியினருக்கு மகனாக (1955 -10-28 ) ம் நாளன்று பிறந்தார். அப்போது தந்தையார் வில்லியம் ஹென்றி கேட்ஸ் புகழ்பெற்ற வழக்கறிஞர் ஆகவும் தாயார் கல்லூரி ஆசிரியையாகவும் கடமையாற்றினார்கள்.

கணினியை பில் பிடித்துக்கொண்டானோ அல்லது கணினி பில்லைப் பிடித்துக்கொண்டதோ தெரியாது.இவரிடம் சிறுவயதில் இருந்தே அறிவியல், கணிதம் போன்ற துறைகளில் நாட்டம் அதிகமாக காணப்பட்டது. சிறுவயதில் பாடசாலையில் முதலாவது மாணவனாக பில் திகழ்ந்ததால் இவர் ஆசிரியர்களின் செல்ல மாணவனாக திகழ்ந்தார்.

எட்டாம் வகுப்பில் படிக்கும் போதே கணினி கல்வியில் ஆர்வம் காட்டினார் பில். அக்காலத்தில் அமெரிக்கா ஐக்கிய நாடுகளில் கூடக் கணினி ஓர் ஆடம்பரப் பொருளாக ,அனைவருக்கும் எட்டாத ஒரு கருவியாக இருந்தது.

அப்பொழுது அப்பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் (அன்னையர் சங்கம் ) மாணவர்களின் நலன் கருதி கணினி நிறுவனம் ஒன்றுடன் உடன்படிக்கை செய்து கொண்டது. இதன் மூலமாகக் கணினியை மாணவர்கள் பயன்படுத்தும் வாய்ப்பை பெற்றுக் கொண்டனர். அப்போது பயன்படுத்திக் கொண்டவர்களில் முக்கியமானவர்கள் பில் கேட்ஸும் அவன் நண்பன் பால் ஆலனும் ஆவர். இவர்களில் பில்கேட்ஸ் எட்டாம் வகுப்பு மாணவனாகவும் பால் ஆலன் பத்தாம் வகுப்பு மாணவன் ஆகவும் இருந்தனர். ஆனால் கணினிக் கல்வியைக் கற்பதில் இருவருக்கும் தணியாத ஆர்வம் ,தீராத தாகம் .அனால் அவர்களின் பாடசாலையில் திறமையான கணினி ஆசிரியர் கூட அப்போது இருக்கவில்லை. இருப்பினும் இரு நண்பர்களும் ஆசிரியர்களே வியக்கும் வகையில் தங்களின் கணினி அறிவை வளர்த்துக் கொண்டார்கள். கணினித் தொழிற்பாடு பற்றிய நூல்களை எல்லாம் ஆர்வமாக தேடித் படித்தார்கள்.

programming மொழியில் இவர்களுக்கு தனி வெறியே ஏற்பட்டுவிட்டது எனலாம். இதனால் இவர்களுக்கு இரவு ,பகல், என்று கிடையாது. பாடசாலை நேரம் ,விடுமுறை என்று கிடையாது. கடும் பயிற்சியில் இருவரும் ஈடுபட்டனர். நடைமுறை வாழ்க்கைக்கு பயன்படும் வகையில் ப்ரோக்ராம்மிங் மொழிகளை உருவாக்க பில் ஆர்வம் கொண்டான். சுருக்கச் சொன்னால் கணினியால் இருவரும் புகுந்து விளையாடிப் புதுமைகள் காண விரும்பினர்.

ஆனால் அக்கால கட்டத்தில் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் நிதி நெருக்கடி காரணமாக பிள்ளைகளின் பெற்றோர்களிடம் நிதி அறவிட்டு செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்ட பொழுது மட்டுப்படுத்தப்பட்ட நேரம் வழங்கப்பட்டது .அது பில்லுக்கு போதுமானதாக காணப் படவில்லை.

பாடசாலையில் கணினிக்கல்விக்கு ஆபத்து நேரிட்ட போதும் பில்லும் , பாலுவும் பல்கலைக்கழக இளைஞர்களின் ஸி.ஸி.ஸி நிறுவனத்துடன் இணைந்து கொண்டார்கள். இவர்கள் அவர்களைவிடச் சிறியவர்களாக காணப்பட்டமையால் இவர்களின் திறமையில் நம்பிக்கை ஏற்படவில்லை. ஆனாலும் பில்லுக்கும் ,பாலுக்கும் மீண்டும் நீண்ட நேரம் கணினியுடன் உறவாட வாய்ப்புக் கிடைத்தது.

பாடசாலைக் கல்வியை முடித்த பிறகு மேல் படிப்பை தொடர்ந்து அப்பாவைப்போல் வக்கீலாகி விட வேண்டும் என்று குடும்பத்தினரும் உறவினர்களும் வற்புறுத்தினர். ஆனால் பில்லின் ஆழ்மனதில் விதைக்கப்பட்ட கணினிக் கனவுகள் ,கணினி programming யை சுற்றி சுற்றி வந்தன.

பில்லும் , பாலும் அங்கு உள்ளவர்களை விடத் திறமையாக நேரகாலம் பாராது வேலை செய்த போதும் அவர்களுக்கு மாணவர்களுக்குரிய கொடுப்பனவே வழங்கப்பட்டது. ஆனாலும் அவர்கள் பணத்திற்காக அங்கு வேலை செய்யவில்லை. கணினியுடன் வேலை செய்யும் வாய்ப்புக்காக பணியை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். இதில் வெற்றி கண்டனர். இதன் பின்னர் பாடசாலை இறுதித் தேர்விலும் சிறப்பாக வெற்றி பெற்றார் பில். ஆனால் பாலு பாடசாலைக் கல்விக்கு முழுக்குப் போட்டுவிட்டான். மேலும் பில் பெற்றோர்களின் விப்பத்திற்கு இணங்க வக்கீல் கல்வியை அவரால் தொடர முடியாத நிலையில் இடைநிறுத்தினார்.

அதன் பின்னர் பில்லும் பாலும் ஒரு கணினி நிறுவனத்தை ஆரம்பித்து பற்றி கனவு காண்பார்கள். திட்டம் தீட்டுவார்கள். விவாதிப்பார்கள்.ஆனால் நிதி நெருக்கடியினால் அவர்கள் திட்டத்தை தள்ளிப் போட்டு விட்டார்கள்.

ஆனால் அவர்களிடம் ஆசை இருந்தது ,ஆற்றல் இருந்தது. அறிவு இருந்தது. அனுபவமும் கூடவேயிருந்தது .காலம் மட்டும் கனியவில்லை. 1974 ம் ஆண்டு இன்டெல் (intel) நிறுவனம் புதியதோர் Micro Processor யை அறிமுகம் செய்தது. அதன் programming பணிக்கு அந்நிறுவனம் பில் ,பால் இடமும் உதவியை நாடியது. இச்சந்தர்ப்பத்தைச் சரியாக பயன்படுத்தி வெற்றி காண வேண்டும் என்ற ஆர்வத்துடன் COBOL, FORTRON, PASCAL போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்ற அவர்கள் BASIC முறையில் programming எழுத ஆரம்பித்தனர்.

அனால் இப்பணியை விரைவாக முடிக்க வேண்டும் ,பிழையின்றி முடிக்க வேண்டும் ,மற்றவர்களை முந்திக்கொண்டு முடிக்க வேண்டும் ,சரியாக முடிக்க வேண்டும் என்று எண்ணினார்கள். அல்லாவிட்டால் தமது இரவு பகல் பாராது உழைத்த கடினமான உழைப்பு பயனற்றுப் போய்விடும் என்று எண்ணினார்கள்.

இவர்களின் விடாமுயற்சியினால் எழுதப்பட்ட programme ஆனது பரிசோதித்து பார்க்கப்பட்டது. முயற்சி வெற்றி கண்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த பில்லின் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. அப்போது பில்லுக்கு இருபது வயது .இந்த வெற்றியின் திருப்பு முனை அவர்களை உலகறியச் செய்தது.

1977 ஆம் ஆண்டு ஆல்புகர்க் நகரின் மிகப் பெரிய அடுக்கு மாடிக் கட்டடத்தின் எட்டாவது மாடியில் ஒரு அறையில் இவர்கள் நிறுவனத்தை ஆரம்பித்தனர். அந்த அறையில் அங்கும் இங்குமாகக் கணினிகள் கிடந்தன. விசைப்பலகைகளில் சில விரல்கை விளையாடிக் கொண்டிருந்தன. அங்கு சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ரைப்பிரைட்டரில் அமர்ந்து கொண்டிருந்தாள்.

திடீரென புயல் போல ஒரு பையன் அந்த அறைக்குள் நுழைந்து நிர்வாகியின் அறைக்குள் போய்க் கொண்டிருந்தான். ஹலோ ..ஹலோ ..யாரது? முதலாளி ஊரில் இல்லை என உரக்க குரல் கொடுத்தார். ஏனெனில் வெளியார் யாரும் அந்த அறைக்குள் நுழையக் கூடாது என்பது உத்தரவு.
அவனோ கதிரையில் அமர்ந்து கணினியில் கவனம் செலுத்த ஆரம்பித்தான். அந்தப் பெண் புதிதாக நியமனம் பெற்றவள்.அவள் வேகமாக தனது அலுவலகரை நோக்கிச் சென்று சார் யாரோ ஒரு பையன் .. அவள் முடிக்கவில்லை அவர் சிரித்தபடி பையனா? அவர் தான் இந்தக் கம்பனியின் முதலாளி பில்கேட்ஸ் என்றார். அந்தப் பெண்ணின் விழிகள் வியப்பில் விரிந்தன. இருபது வயது இந்த சின்ன பெடியன் இக் கம்பனியின் முதலாளியா? நம்பவே முடியவில்லை? ஆனால் உண்மை அதுதான்.

அச்சிறிய கம்பனி "மைக்ரோசொப்ட் "("Microsoft") என்ற பெயருடன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர ஆரம்பித்தது. இன்று உலகமே திரும்பிப்பார்க்கும் அளவுக்கு மைரோசொப்டின் இயங்கு மென் பொதிகளும் ,பிரயோக மென்பொதிகளும், புரோக்கிராம் மொழிகளும் , அனைத்துக் கணினிகளிலும் விரும்பிப் பயன்படுவதை அனைவரும் அறிந்ததே. இவ் வெற்றிக்கு பில்கேட்சின் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் மைக்ரோசொப்ட் உத்தியோகத்தர்களின் அயராத உழைப்பும் காரணம் என்றால் மிகையாகாது. இதனாலேயே மைக்ரோசொப்ட் உலகெங்கும் கொடி கட்டி பறக்க ஆரம்பித்தது.

இதற்கிடையில் பில்கேட்ஸ் எந்தக் கல்லூரியிலும் பட்டம் பெற்றவர் அல்லர். அவருக்குப் பட்டப் படிப்போ ,பட்டயப் படிப்போ முக்கியமானதாகத் தெரியவில்லை. கணினி மொழியில் அவர் கொண்டிருந்த ஆர்வமும் விடாமுயற்சியும் அவரை இன்று உலகம் அறிய வைத்தது.

தனது நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் திறமை மதிப்பிடப்பட்டு திறமைக்கேற்றவாறு ஊக்கிவிப்பு பரிசில்கள் ,சம்பள உயர்வு ,பதவி உயர்வு, போனஸ் என்பன வழங்கப்பட்டு வருகின்றமை சிறப்பம்சமாகும். கடினமாக ,தீவிரமாக முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி வேலை செய்ய முடியாதவர்களை இந்த இடம் உங்களுக்கு ஏற்றதல்ல என்று சொல்லி வெளியே அனுப்பிவிடுவாராம்.

பில்கேட்சிடம் உள்ள ஒரு நல்ல அம்சம் தொழிலாளர் ,நிர்வாகி ,முதலாளி என்ற இரும்புத் திரைப் பிரிவு வேறுபாடுகள் இல்லை. எல்லோரும் கலந்து பழகலாம், ஆலோசனை வழங்கலாம் .
மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் பணியாற்றிய மெலிண்டா பிரெஞ்ச் என்ற பெண்ணை நேசிக்கத் தொடங்கினார். கண்டதும் காதல் என்று கொள்ளாது ஐந்து வருடங்களுக்கு மேலாக நெருங்கிப் பழகிய பின்னர் அந்த நட்பு காதலாக மலர்ந்தது. அவள் அழகைவிட அறிவால், உழைப்பால் உயர்ந்தவள். சுறுசுறுப்பானவள். ,கலகலப்பான இயல்பு உடையவள்.

1994 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் நாள் புது மணவாழ்வில் இணைந்து கொண்டனர். இவர்களுக்கு 1996 இல் ஒரு மகளும் 1999 இல் ஒரு மகனும் பிள்ளைச் செல்வங்களாக கிடைத்தன."ஆசைக்கொரு மகளும் ,ஆஸ்திக்கொரு மகனும் "என்பதே பலர் இலட்சியக் கனவு இந்த வகையிலும் பில்கேட்ஸ் கொடுத்து வைத்தவரானார்.

அமெரிக்கக் கோடை வள்ளல்களில் மூன்றாம் இடத்தை வகிக்கும் அவர் கோடீஸ்வரர் வரிசையிலும் மூன்றாவது இடத்தில் இன்று (2008 )உள்ளார்.

உலகில் எல்லாக் கணினிகளிலும் மைக்ரோசொப்டின் மென்பொருள்களே பயன்படுத்தப்படுகின்ற நிலையில் அதன் திருட்டு மென்பொருள் பாவனையை கடுமையாக எதிர்க்கின்றார் பில்கேட்ஸ் .இதனால் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட மென்பொருளை அதிக விலை கொடுத்து வங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முன்னர் இவை குறைந்த பெறுமதியில் சாதாரண CD களில் அனைத்து இடங்களிலும் பெறக்கூடியதாக இருந்தது.

உலகில் மைக்ரோசொப்ட் மென்பொருள் மூலம் அன்றும் இன்றும் கொடி கட்டிப் பறக்கும் பில்கேட்ஸ் 1995 ம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கைக்கு வருகை தந்து ஒரு மணித்தியாலத்திற்குள் தனது சொந்த விமானத்தில் திரும்பி விட்டார். பில்கேட்ஸ் தனது தலைமைப் பதவியை 27 .06 .2008 இல் ஸ்டீவ் போல்மருக்கு கொடுத்துவிட்டு அந்நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்று அவரால் ஸ்தாபிக்கப்பட்ட பில் அன்ட்மலிந்த பவுண்டேசன் எனப்படும் சமூக சேவை அமைப்பில் அதிக நேரத்த செலவிடுவதற்கு தீர்மானித்தார்.

                      "தான் கணினி பாதையில் சென்ற தூரம் சொற்பம்
                         செல்ல வேண்டிய தூரம் மிக மிக அதிகம் "             
                                                                                                                                           என்று கூறுகின்றார்.

Tuesday, October 30, 2012

ஸ்டீவ் ஜாப்








பில் கேட்ஸை அறிந்த அளவுக்கு ஸ்டீவ் ஜாப்ஸை உலகம் அறிந்ததில்லை. பில் கேட்ஸ் என்றவுடன் மைக்ரோசாப்ட் சாம்ராஜ்யமும், அவரது உல மகா கோடீஸ்வரர் பட்டமும் நினைவுக்கு வரும். ஆனால், கம்ப்யூட்டர் உலகை பொறுத்தவரை ஜாப்ஸ் கோடீஸ்வர கேட்சை விட செல்வாக்கும் மதிப்பும் மிக்கவர். தொழில்நுட்பத்தில், அதிலும் குறிப்பாக வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவர்களுக்கு அவர் தான் ஆதர்ச நாயகன்!

ஆப்பிளின் இணை நிறுவனர் என்று குறிப்பிடப்படும் ஜாப்ஸின் தொழில்நுட்ப புரிதலும் டிவமைப்பில் அவருக்கு இருந்த ஆற்றலும் அசாத்தியமானவை. மேக்கின்டாஷில் துவங்கி, ஐபாட், ஐபோன், ஐபேட் என அவர் பெயர் சொல்லும் தயாரிப்புகள் அநேகம். ஒவொன்றுமே கம்ப்யூட்டர் உலகில் தொழில்நுட்ப மைல்கல்லாக விளங்குபவை. அந்தத் துறைகளையே மாற்றியமைத்தவை.

ஜாப்சின் தொலைநோக்கு தன்மை ஆப்பிள் நிறுவனத்துக்கு மட்டும் அல்ல; தொழில்நுட்ப உலகுக்கே வழிகாட்டின என்றுதான் சொல்ல வேண்டும்.

தொலைநோக்கு என்ற மந்திரச்சொல்!

ஜாப்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியும் என்றாலும், அவரது மரணம் தொழில்நுட்ப உலகையே உலுக்கிவிட்டது. அமெரிக்க அதிபர் ஒபாமாவில் துவங்கி, போட்டியாளரான பில்கேட்ஸ் வரை அனைவரும் ஜாப்ஸ் மறைவை பேரிழப்பு என்று வர்ணித்துள்ளனர். டிவிட்டர் உலகிலும் அவரது மறைவு பேரதிர்வை உண்டாகியது. நொடிக்கு 10,000 குறும்பதிவுகள் என டிவிட்டர் ஜாப்சை நினைத்து கதறியது.

பிரபல வால் ஸ்டிரீட் ஜர்னல் நாளிதழ், ‘தொழில்நுட்பத்தோடு மக்கள் தொடர்பு கொள்ளும் விதத்தை மாற்றி அமைத்தவர்,’ என புகழாரம் சூட்டியது.

ஜாப்ஸ் போன்ற தொலைநோக்கு மிக்க ஒருவரால் தான் ஆப்பிள் போன்ற நிறுவனத்தை உருவாக்க முடியும்,” என ஆப்பிள் நிறுவனம் கம்பீரமாக இரங்கல் தெரிவித்தது.

ஜாப்ஸை போல உலகின் மீது தாக்கம் செலுத்தக் கூடிய மனிதரை அரிதாகவே பார்க்க முடியும். அவரது பாதிப்பு பல தலைமுறைகளுக்கு நீடித்து நிற்கும்,” என்று பில் கேட்ஸ் தெரிவித்திருந்தார்.

எல்லா இரங்கல் குறிப்புகளிலும்தொலைநோக்குஎன்ற வார்த்தையை தவறாமல் பார்க்க முடிந்தது. ‘படைப்பாற்றல் மிக்கவர்என்ற பாராட்டும் இருந்தது.

தொழில்நுட்ப வடிவமைப்பையும் கலையையும் ஒன்றிணைத்த மேதை,’ என்று வால் ஸ்டிரீட் ஜர்னல் எழுதியது.

உண்மை தான். ஆப்பிளின் தயாரிப்புகள் எல்லாமே செம ஸ்டைலானவை. கூடவே பயன்பாட்டு தன்மை மிக்கவை. இவை இரண்டும் தான் ஆப்பிளை உலகின் மதிப்பு மிக்க நிறுவனமாக உயர்த்தியது.

தவப்புதல்வனான தத்துப்பிள்ளை!

இன்று பங்குதாரர்களும் வாடிக்கையாளர்களும் கொண்டாடும் ஆப்பிள் நிறுவனத்தை ஸ்டீவ் ஜாப்ஸ் உருவாக்கிய கதை மிகவும் சுவாரஸ்யமானது. இன்று தொழில்நுடப் மேதை என்று உலகமே கொண்டாடும் ஜாப்ஸ் கல்லூரி படிப்பை பாதியில் கைவிட்டவர் என்பது தான் ஆச்சர்யம்.

தொழில்நுட்ப உலகின் தவப்புதல்வன் என்று புகழப்படும் ஜாப்ஸ், உண்மையில் தத்துப்பிள்ளையாக பிறந்தவர். ஸ்டீவ் பால் ஜாப்ஸ் என்பது அவரது இயற்பெயர். 1955 பிப்ரவரி 24-ல் கல்லூரி மாணவ தம்பதிக்கு பிறந்த ஜாப்ஸ், கிலாரா மற்றும் பால் ஜாப்ஸுக்கு தத்து கொடுக்கப்பட்டார்.

சிறுவனாக இருக்கும் போதே அப்பாவுடன் ஜாப்ஸ் வீட்டு கேரேஜில் மின்னணு பொருட்களுடன் விளையாடிக்கொண்டிருப்பார். ஜாப்ஸுக்கும் தொழில்நுட்பத்துக்குமான உறவு இப்படி தான் ஆரம்பமானது. அவரை படிப்பில் சுட்டி என்று சொல்ல முடியாவிட்டாலும் சரியான வால் பையனாக தான் இருந்தார். குறும்பு செய்வதில் கெட்டிக்காரராக இருந்த அவரை படிக்க வைக்க ஆசிரியையே லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

என் வழி தனி வழி’!

எப்போதுமே தனிமை விரும்பியாக இருந்த அவரிடம் அப்போதேஎன் வழி தனி வழிஎனும் மனப்போக்கு இருந்தது. மற்ற மாணவர்களிடம் இருந்து எதையுமே வித்தியாசமாக செய்யும் பழக்கம் ஜாப்ஸிடம் இருந்ததாக அவரது பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியிருக்கிறார்.

மற்ற மாணவர்கள் எல்லாம் ஒய்வு நேரத்தை மைதானங்களில் செல்விடுவார்கள் என்றால், உயர் நிலை பள்ளியில் படித்து கொண்டிருந்தபோதே ஜாப்ஸ், எச் பி நிறுவனத்தில் உரைகளை கேட்டு ரசித்து கொண்டிருந்தார். இங்கு தான் அவருக்கு ஆப்பிளின் மற்றொரு நிறுவனரான ஸ்டீவ் வாஸ்னியாக்கை சந்திக்கும் வாய்ப்பு உண்டானது.

தொழில்நுட்ப ஆர்வம் இருவரையும் சிறந்த நண்பர்களாக்கியது. கம்ப்யூட்டர் விஷயத்தில் வாஸ்னியாக் கில்லாடியாக இருந்தார். இருவருக்கும் பரஸ்பரம் நட்பும் மதிப்பும் உண்டானது.

1972-ல் ஜாப்ஸ் பள்ளியை முடித்துவிட்டு கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் ஒரு செமஸ்டருக்கு பிறகு படிப்பில் அவர் மனம் செல்லவில்லை. தத்துவ ஈடுபாடும் எதிர் கலாச்சார ஆர்வம் அவரை அலைக்கழித்தன. அடுத்த ஆண்டே படிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு வீடியோ கேம் முன்னோடி நிறுவனமான அட்டாரியில் வேலைக்கு சேர்ந்துவிட்டார்.

ஆப்பிள்உருவான கதை

அட்டாரியிலும் அவருக்கு ஈடுபாடு இல்லாமல் போகவே ஆன்மிக தேடலோடு இந்தியாவுக்கு வந்து சுறித்திரிந்தார். கிளர்ச்சியை தரக்கூடிய போதை வஸ்துவை பயன்படுத்துவது என்றெல்லாம் தடம் மாறி அலைந்த ஜாப்ஸ் 1976-ல் அமெரிக்க திரும்பினார். அப்போது அவருக்கு 21 வயது. நண்பர் வவஸ்னியோக் கம்ப்யூட்டர் கிளப் ஒன்றை நடத்தி கொண்டிருந்தார். ஜாப்ஸ் அதில் தன்னை இணைத்து கொண்டார்.

அந்த காலத்தில் எல்லாம் கம்ப்யூட்டர் என்றால் மைன்பிரேம் கம்ப்யூட்டர் தான். ஒரு பெரிய் வீட்டின் அளவுக்கு இருந்த மைன்பிரேம் கம்ப்யூட்டர்களை எல்லோரும் பயன்படுத்திவிடமுடியாது. கொஞ்சம் தொழில்நுட்ப அறிவு இருந்தால் தான் அதன் பக்கமே போக முடியும்.

வாஸ்னியோக் இதில் கில்லாடியாக இருந்தார். ஆனால் ஜாப்ஸுக்கு கம்ப்யூட்டர் உருவாக்கத்தைவிட தன்னை மார்க்கெட் செய்வதில் தான் ஆர்வம் இருந்தது. எல்லோரும் பயன்படுத்தக்கூடிய ஒரு எளிமையான கம்ப்யூட்டரை உருவாக்கி விற்பனை செய்ய வேண்டும் என்று நண்பர் வாஸ்னியோக்கிடம் அவர் வலியுறுத்தினார்.

வாஸ்யோக் அதற்கு ஒப்புக்கொள்ளவே நண்பர்கள் ஒன்று சேர்ந்து புதிய நிறுவனத்தை உருவாக்கினார். ஜாப்ஸ், ‘பீட்டில்ஸ் இசைகுழுவின் பரம ரசிகர் என்பதால் பீட்டில் பாடல் ஒன்றின் பெயரான ஆப்பிள் என்பதையே நிறுவனத்துக்கு பெயராக வைத்து விட்டார்.

இருவரும் கையில் இருந்த பணத்தை முதலீடாக போட்டு நிறுவனத்தை துவக்கி கம்ப்யூட்டர் வடிவமைப்பில் ஈடுபட்டனர். ஜாப்ஸின் வீட்டு கேரேஜ் தான் அவர்களது அலுவலகம், ஆய்வுகூடம். அதுவே தான் நிறுவனம்.

முதல் இன்னிங்ஸ் வீழ்ச்சி..

முதலில் ஆப்பிள் 1 கம்ப்யூட்டரை அறிமுகம் செய்தனர். 666 டாலருக்கு சந்தைக்கு வந்த இந்த கம்ப்யூட்டர் அப்போது ஏற்படுத்தியிருக்க கூடிய மகிழ்ச்சியை இப்போது நினைத்து பார்ப்பது கொஞ்சம் கடினம் தான். காரணம்.. ஆப்பிள் கம்ப்யூட்டர் எளிதானதாக, சிறியதாக, மலிவானதாக இருந்தது. சாமான்யர்கள் கிட்ட கூட செல்ல முடியாத மைன்பிரேம் கம்ப்யூட்டரோடு ஒப்பிட்டால் ஆப்பிள் கம்ப்யூட்டரை புரட்சிகரமானது என்றே சொல்லலாம்.

ஒரு விதத்தில் பர்சன்ல் கம்ப்யூட்டர்களின் துவக்கமாகவும் இது அமைந்தது. கம்ப்யூட்டரை ஜனநாயகமயமாக்கும் செயலாகவும் அமைந்தது.

மூன்று ஆண்டுகள் கழித்து ஆப்பிள் 2 கம்ப்யூட்டரை அறிமுகம் செய்தனர். ஆப்பிளின் வடிவமைப்பு எளிமையாக பயன்பாட்டுத் தன்மை மிக்கதாக இருந்ததால் விற்பனையும் அதிகரித்தது. நிறுவனமும் காலூன்றியது. பங்குந்தையிலும் பட்டியலிடப்பட்டு பெரியநிறுவனமானது.

இதே கால கட்டத்தில் தான் பிசி சந்தையில் ஐபிஎம் போன்ற நிறுவனங்கள் கோலோச்ச துவங்கின. போட்டியை சமாளிக்க ஆப்பிளுக்கு பெப்சி சீஇஓ ஒருவரை ஜாப்ஸ் அழைத்து வந்தார்.

ஆனால், இதனிடையே மைக்ரோசாப்டின் எழுச்சியும் இன்டெலுடனான் அதன் கூட்டணியும் பெரும் வெற்றி பெறவே ஆப்பிள் திண்டாடியது. 1984-ம் ஆண்டும் ஜாப்ஸ் புகழ்பெற்ற மேக்கின்டாஷ் கம்ப்யூட்டரை அறிமுகம் செய்தார். இதற்கு அவர் பயன்படுத்திய உத்தி இன்றளவும் பெரிதாக பேசப்படுகிறது.

கம்ப்யூட்டர் என்றால் மேக் தான் என்று சொல்லக்கூடிய வகையில் மேக் அபிமானிகள் உருவானாலும் ந்தையில் ஆப்பிளுக்கு சரிவே உண்டானது. இதனைடையே ஆப்பிள், மவுசை முதலில் பயன்படுத்திய முன்னோடி கம்ப்யூட்டரான லிசா உட்பட புதிய மாதிரிகளை அறிமுகம் செய்தாலும் விற்பனையில் முந்த முடியவில்லை.

இதனால் நிறுவனத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஜாப்ஸ் 1985 ல் ஆப்பிலில் இருந்து விலகி நெக்ஸ்ட் கம்ப்யூட்டர் என்னும் தனி நிறுவனத்தை துவக்கினார்.அந்தநிறுவனம் பெரிதாக வெற்றி பெறவில்லை.

அடுத்த பதினோறு ஆண்டுகள் ஜாப்ஸை உலகம் மறந்தே விட்டது. இடைப்பட்ட காலத்தில் வின்டோஸ் சக்கை போடு போட தனது ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பிற நிறுவங்கள் பயன்படுத்த அனுமதிக்காத ஆப்பிள் திண்டாடி தடுமாறியது.

ஆப்பிள் விற்பனை சரிந்து அதன் பங்குகளும் வீழ்ச்சி அடைந்த நிலையில் நஷ்டத்தில் தள்ளாடும் நிறுவனத்தை தூக்கி நிறுத்தும் கடைசி முயற்சியாக மீண்டும் ஸ்டீவ் ஜாப்ஸிடமே ஆப்பிள் தஞ்சமடைந்தது.

ஆனால் ஜாப்ஸால் கூட ஆப்பிளை காப்பாற்ற முடியாது; ஆப்பிளின் காலம் முடிந்து விட்டது என்றே பலரும் நம்பினர்.

இரண்டாவது இன்னிங்ஸ்சின் எழுச்சி..

ஒரு பக்கம் நஷ்டம் இன்னொரு பக்கம் வேறு திசையில் சென்றுவிட்ட கம்ப்யூட்டர் உலகம் என்றசூழ்நிலையில் தான் ஜாப்ஸின் இரண்டாவது இன்னிங்கஸ் ஆரம்பமானது.

ஆப்பிளின் அடிப்படை பலமான நேர்த்தியான வடிவமைப்பு, எளிமையான பயன்பாட்டுத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்திய ஜாப்ஸ் அசத்தலான ஐமேக் கம்ப்யூட்டர்களை அறிமுகம் செய்து திரும்பி பார்க்க வைத்தார்.

எல்லோரும் கம்ப்யூட்டர்களிலேயே கவனம் செலுத்தி கொண்டிருந்த காலத்தில் யாருமே எதிர்பாராத வகையில் எம்பி3 வடிவில் பாடல்களை கேட்க உதவும் சாதனமான ஐபாடை (iPod) அறிமுகம் செய்தார். அவ்வளவு தான் அமெரிக்காவும் அகில உலகமும் ஐபாடு மூலம் ஆப்பிள் சமானது.

எல்லோரும் காதுகளில் ஐபாடை மாட்டி கொண்டு திரிந்தனர். வாக்மேனுக்கு பிறகு இசை உலகில் பெரும் புரட்சியை ஐபாடு உண்டாக்கியது. இத்தனைக்கும் ஐபாட் முதல் எம்பி3 பிளேயர் அல்ல. அப்போது சந்தையில் பல பிளேயர்கள் இருந்தன. ஆனால் ஐபாடின் எளிமையும் நேரத்தியும் எம்பி3 பிளேயர் என்றால் ஐபாட் என்று சொல்ல வைத்தன.

மற்ற எந்த பிளேயரை விடவும் ஐபாடை கையாள்வது எளிதாக இருந்த்து. விருப்பமான பாடலை தேட பட்டன் பட்டனாக தட்டி கொன்டிருக்காமால் கைவிரல இப்படியும் அப்படியுமாக நகர்த்துவதன் மூலமே பாட்லக்ளை தேர்வு செய்யும் லாவகத்தை ஐபாட் தந்தது.

இந்த எளிமையான வடிவமைப்பு மற்றும் பயன்பாடு தான் ஜாப்சின் தனித்தன்மையாக அமைந்தது.

இன்டெர்நெட்டில் பாடல்களை டவுன்ட்லோடு செய்வது பெரும் பிரச்னையாக உருவான நிலையில் ஜாப்ஸ் பாடல்களை காப்புரிமை சிக்கல் இல்லாமல் வாங்குவதற்கான ஐடியூன்ஸ் இணைய இசை கடையை துவக்கி அடுத்த அஸ்திரத்தை பிரயோகித்து இசைத்துறையை கைப்பற்றினார்.

ஜீனியஸ் ஜாப்ஸ்!

எல்லோரும் ஐபாட் பற்றி பேசிகொண்டிருந்த போது, செல்போன்கள் செல்லும் திசையை புரிந்து கொண்டு ஐபோனை அறிமுகம் செய்தார். டச் ஸ்கிரின் வசதியோடு வந்த அதன் எளிமையும் கம்ப்யூட்டரின் செயல்திறனும் ஐபோனை (iPhone) சூப்பர் ஹிட்டாக்கியது.

பிளாக்பெரி போன்றவை சாதிக்க முடியாததை ஐபோன் சாதித்து. ஸ்மார்ட் போன்களுக்கான சந்தையை உருவாக்கியது. ஐபோன்களுக்கான புதிய செயலிகள் அதனை புதிய உயரத்துக்கு கொண்டு சென்றன.

அடுத்ததாக ஐபேடை (iPad) அறிமுகம் செய்து மைக்ரோசாப்டே மண்ணை கவ்விய டேப்லெட் கம்ப்யூட்டர் சத்தியில் ஆப்பிள் வெற்றிக்கொடி நாட்டியது.

ஐபோனும் ஐபேடும் கம்ப்யூட்டருடன் நாம் தொடர்பு கொள்ளும் விதத்தையே மாற்றி அமைத்துள்ளன. தகவல் தொடர்பிலும் புதிய பாதை வகுத்துள்ள‌‌. இதற்காக தான் ஜாப்ஸ் ஜீனியஸ் என்று கொண்டாடப்படுகிறார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன் ஆப்பிள் தலைவர் பதவியில் இருந்து விலகிய ஸ்டீவ் ஜாப்ஸ், மீளா துயிலில் ஆழ்ந்துவிட்டார். ஆனால், அவர் உண்டாக்கிய கம்ப்யூட்டர் புரட்சி என்றென்றும் நிலைத்து நிற்கும்.

தொழில்நுட்ப உலகம் இன்று துயரத்துடன் உச்சரிக்கும் ஒரே வார்த்தை… iSad