Tuesday, October 30, 2012

ஸ்டீவ் ஜாப்








பில் கேட்ஸை அறிந்த அளவுக்கு ஸ்டீவ் ஜாப்ஸை உலகம் அறிந்ததில்லை. பில் கேட்ஸ் என்றவுடன் மைக்ரோசாப்ட் சாம்ராஜ்யமும், அவரது உல மகா கோடீஸ்வரர் பட்டமும் நினைவுக்கு வரும். ஆனால், கம்ப்யூட்டர் உலகை பொறுத்தவரை ஜாப்ஸ் கோடீஸ்வர கேட்சை விட செல்வாக்கும் மதிப்பும் மிக்கவர். தொழில்நுட்பத்தில், அதிலும் குறிப்பாக வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவர்களுக்கு அவர் தான் ஆதர்ச நாயகன்!

ஆப்பிளின் இணை நிறுவனர் என்று குறிப்பிடப்படும் ஜாப்ஸின் தொழில்நுட்ப புரிதலும் டிவமைப்பில் அவருக்கு இருந்த ஆற்றலும் அசாத்தியமானவை. மேக்கின்டாஷில் துவங்கி, ஐபாட், ஐபோன், ஐபேட் என அவர் பெயர் சொல்லும் தயாரிப்புகள் அநேகம். ஒவொன்றுமே கம்ப்யூட்டர் உலகில் தொழில்நுட்ப மைல்கல்லாக விளங்குபவை. அந்தத் துறைகளையே மாற்றியமைத்தவை.

ஜாப்சின் தொலைநோக்கு தன்மை ஆப்பிள் நிறுவனத்துக்கு மட்டும் அல்ல; தொழில்நுட்ப உலகுக்கே வழிகாட்டின என்றுதான் சொல்ல வேண்டும்.

தொலைநோக்கு என்ற மந்திரச்சொல்!

ஜாப்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியும் என்றாலும், அவரது மரணம் தொழில்நுட்ப உலகையே உலுக்கிவிட்டது. அமெரிக்க அதிபர் ஒபாமாவில் துவங்கி, போட்டியாளரான பில்கேட்ஸ் வரை அனைவரும் ஜாப்ஸ் மறைவை பேரிழப்பு என்று வர்ணித்துள்ளனர். டிவிட்டர் உலகிலும் அவரது மறைவு பேரதிர்வை உண்டாகியது. நொடிக்கு 10,000 குறும்பதிவுகள் என டிவிட்டர் ஜாப்சை நினைத்து கதறியது.

பிரபல வால் ஸ்டிரீட் ஜர்னல் நாளிதழ், ‘தொழில்நுட்பத்தோடு மக்கள் தொடர்பு கொள்ளும் விதத்தை மாற்றி அமைத்தவர்,’ என புகழாரம் சூட்டியது.

ஜாப்ஸ் போன்ற தொலைநோக்கு மிக்க ஒருவரால் தான் ஆப்பிள் போன்ற நிறுவனத்தை உருவாக்க முடியும்,” என ஆப்பிள் நிறுவனம் கம்பீரமாக இரங்கல் தெரிவித்தது.

ஜாப்ஸை போல உலகின் மீது தாக்கம் செலுத்தக் கூடிய மனிதரை அரிதாகவே பார்க்க முடியும். அவரது பாதிப்பு பல தலைமுறைகளுக்கு நீடித்து நிற்கும்,” என்று பில் கேட்ஸ் தெரிவித்திருந்தார்.

எல்லா இரங்கல் குறிப்புகளிலும்தொலைநோக்குஎன்ற வார்த்தையை தவறாமல் பார்க்க முடிந்தது. ‘படைப்பாற்றல் மிக்கவர்என்ற பாராட்டும் இருந்தது.

தொழில்நுட்ப வடிவமைப்பையும் கலையையும் ஒன்றிணைத்த மேதை,’ என்று வால் ஸ்டிரீட் ஜர்னல் எழுதியது.

உண்மை தான். ஆப்பிளின் தயாரிப்புகள் எல்லாமே செம ஸ்டைலானவை. கூடவே பயன்பாட்டு தன்மை மிக்கவை. இவை இரண்டும் தான் ஆப்பிளை உலகின் மதிப்பு மிக்க நிறுவனமாக உயர்த்தியது.

தவப்புதல்வனான தத்துப்பிள்ளை!

இன்று பங்குதாரர்களும் வாடிக்கையாளர்களும் கொண்டாடும் ஆப்பிள் நிறுவனத்தை ஸ்டீவ் ஜாப்ஸ் உருவாக்கிய கதை மிகவும் சுவாரஸ்யமானது. இன்று தொழில்நுடப் மேதை என்று உலகமே கொண்டாடும் ஜாப்ஸ் கல்லூரி படிப்பை பாதியில் கைவிட்டவர் என்பது தான் ஆச்சர்யம்.

தொழில்நுட்ப உலகின் தவப்புதல்வன் என்று புகழப்படும் ஜாப்ஸ், உண்மையில் தத்துப்பிள்ளையாக பிறந்தவர். ஸ்டீவ் பால் ஜாப்ஸ் என்பது அவரது இயற்பெயர். 1955 பிப்ரவரி 24-ல் கல்லூரி மாணவ தம்பதிக்கு பிறந்த ஜாப்ஸ், கிலாரா மற்றும் பால் ஜாப்ஸுக்கு தத்து கொடுக்கப்பட்டார்.

சிறுவனாக இருக்கும் போதே அப்பாவுடன் ஜாப்ஸ் வீட்டு கேரேஜில் மின்னணு பொருட்களுடன் விளையாடிக்கொண்டிருப்பார். ஜாப்ஸுக்கும் தொழில்நுட்பத்துக்குமான உறவு இப்படி தான் ஆரம்பமானது. அவரை படிப்பில் சுட்டி என்று சொல்ல முடியாவிட்டாலும் சரியான வால் பையனாக தான் இருந்தார். குறும்பு செய்வதில் கெட்டிக்காரராக இருந்த அவரை படிக்க வைக்க ஆசிரியையே லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

என் வழி தனி வழி’!

எப்போதுமே தனிமை விரும்பியாக இருந்த அவரிடம் அப்போதேஎன் வழி தனி வழிஎனும் மனப்போக்கு இருந்தது. மற்ற மாணவர்களிடம் இருந்து எதையுமே வித்தியாசமாக செய்யும் பழக்கம் ஜாப்ஸிடம் இருந்ததாக அவரது பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியிருக்கிறார்.

மற்ற மாணவர்கள் எல்லாம் ஒய்வு நேரத்தை மைதானங்களில் செல்விடுவார்கள் என்றால், உயர் நிலை பள்ளியில் படித்து கொண்டிருந்தபோதே ஜாப்ஸ், எச் பி நிறுவனத்தில் உரைகளை கேட்டு ரசித்து கொண்டிருந்தார். இங்கு தான் அவருக்கு ஆப்பிளின் மற்றொரு நிறுவனரான ஸ்டீவ் வாஸ்னியாக்கை சந்திக்கும் வாய்ப்பு உண்டானது.

தொழில்நுட்ப ஆர்வம் இருவரையும் சிறந்த நண்பர்களாக்கியது. கம்ப்யூட்டர் விஷயத்தில் வாஸ்னியாக் கில்லாடியாக இருந்தார். இருவருக்கும் பரஸ்பரம் நட்பும் மதிப்பும் உண்டானது.

1972-ல் ஜாப்ஸ் பள்ளியை முடித்துவிட்டு கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் ஒரு செமஸ்டருக்கு பிறகு படிப்பில் அவர் மனம் செல்லவில்லை. தத்துவ ஈடுபாடும் எதிர் கலாச்சார ஆர்வம் அவரை அலைக்கழித்தன. அடுத்த ஆண்டே படிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு வீடியோ கேம் முன்னோடி நிறுவனமான அட்டாரியில் வேலைக்கு சேர்ந்துவிட்டார்.

ஆப்பிள்உருவான கதை

அட்டாரியிலும் அவருக்கு ஈடுபாடு இல்லாமல் போகவே ஆன்மிக தேடலோடு இந்தியாவுக்கு வந்து சுறித்திரிந்தார். கிளர்ச்சியை தரக்கூடிய போதை வஸ்துவை பயன்படுத்துவது என்றெல்லாம் தடம் மாறி அலைந்த ஜாப்ஸ் 1976-ல் அமெரிக்க திரும்பினார். அப்போது அவருக்கு 21 வயது. நண்பர் வவஸ்னியோக் கம்ப்யூட்டர் கிளப் ஒன்றை நடத்தி கொண்டிருந்தார். ஜாப்ஸ் அதில் தன்னை இணைத்து கொண்டார்.

அந்த காலத்தில் எல்லாம் கம்ப்யூட்டர் என்றால் மைன்பிரேம் கம்ப்யூட்டர் தான். ஒரு பெரிய் வீட்டின் அளவுக்கு இருந்த மைன்பிரேம் கம்ப்யூட்டர்களை எல்லோரும் பயன்படுத்திவிடமுடியாது. கொஞ்சம் தொழில்நுட்ப அறிவு இருந்தால் தான் அதன் பக்கமே போக முடியும்.

வாஸ்னியோக் இதில் கில்லாடியாக இருந்தார். ஆனால் ஜாப்ஸுக்கு கம்ப்யூட்டர் உருவாக்கத்தைவிட தன்னை மார்க்கெட் செய்வதில் தான் ஆர்வம் இருந்தது. எல்லோரும் பயன்படுத்தக்கூடிய ஒரு எளிமையான கம்ப்யூட்டரை உருவாக்கி விற்பனை செய்ய வேண்டும் என்று நண்பர் வாஸ்னியோக்கிடம் அவர் வலியுறுத்தினார்.

வாஸ்யோக் அதற்கு ஒப்புக்கொள்ளவே நண்பர்கள் ஒன்று சேர்ந்து புதிய நிறுவனத்தை உருவாக்கினார். ஜாப்ஸ், ‘பீட்டில்ஸ் இசைகுழுவின் பரம ரசிகர் என்பதால் பீட்டில் பாடல் ஒன்றின் பெயரான ஆப்பிள் என்பதையே நிறுவனத்துக்கு பெயராக வைத்து விட்டார்.

இருவரும் கையில் இருந்த பணத்தை முதலீடாக போட்டு நிறுவனத்தை துவக்கி கம்ப்யூட்டர் வடிவமைப்பில் ஈடுபட்டனர். ஜாப்ஸின் வீட்டு கேரேஜ் தான் அவர்களது அலுவலகம், ஆய்வுகூடம். அதுவே தான் நிறுவனம்.

முதல் இன்னிங்ஸ் வீழ்ச்சி..

முதலில் ஆப்பிள் 1 கம்ப்யூட்டரை அறிமுகம் செய்தனர். 666 டாலருக்கு சந்தைக்கு வந்த இந்த கம்ப்யூட்டர் அப்போது ஏற்படுத்தியிருக்க கூடிய மகிழ்ச்சியை இப்போது நினைத்து பார்ப்பது கொஞ்சம் கடினம் தான். காரணம்.. ஆப்பிள் கம்ப்யூட்டர் எளிதானதாக, சிறியதாக, மலிவானதாக இருந்தது. சாமான்யர்கள் கிட்ட கூட செல்ல முடியாத மைன்பிரேம் கம்ப்யூட்டரோடு ஒப்பிட்டால் ஆப்பிள் கம்ப்யூட்டரை புரட்சிகரமானது என்றே சொல்லலாம்.

ஒரு விதத்தில் பர்சன்ல் கம்ப்யூட்டர்களின் துவக்கமாகவும் இது அமைந்தது. கம்ப்யூட்டரை ஜனநாயகமயமாக்கும் செயலாகவும் அமைந்தது.

மூன்று ஆண்டுகள் கழித்து ஆப்பிள் 2 கம்ப்யூட்டரை அறிமுகம் செய்தனர். ஆப்பிளின் வடிவமைப்பு எளிமையாக பயன்பாட்டுத் தன்மை மிக்கதாக இருந்ததால் விற்பனையும் அதிகரித்தது. நிறுவனமும் காலூன்றியது. பங்குந்தையிலும் பட்டியலிடப்பட்டு பெரியநிறுவனமானது.

இதே கால கட்டத்தில் தான் பிசி சந்தையில் ஐபிஎம் போன்ற நிறுவனங்கள் கோலோச்ச துவங்கின. போட்டியை சமாளிக்க ஆப்பிளுக்கு பெப்சி சீஇஓ ஒருவரை ஜாப்ஸ் அழைத்து வந்தார்.

ஆனால், இதனிடையே மைக்ரோசாப்டின் எழுச்சியும் இன்டெலுடனான் அதன் கூட்டணியும் பெரும் வெற்றி பெறவே ஆப்பிள் திண்டாடியது. 1984-ம் ஆண்டும் ஜாப்ஸ் புகழ்பெற்ற மேக்கின்டாஷ் கம்ப்யூட்டரை அறிமுகம் செய்தார். இதற்கு அவர் பயன்படுத்திய உத்தி இன்றளவும் பெரிதாக பேசப்படுகிறது.

கம்ப்யூட்டர் என்றால் மேக் தான் என்று சொல்லக்கூடிய வகையில் மேக் அபிமானிகள் உருவானாலும் ந்தையில் ஆப்பிளுக்கு சரிவே உண்டானது. இதனைடையே ஆப்பிள், மவுசை முதலில் பயன்படுத்திய முன்னோடி கம்ப்யூட்டரான லிசா உட்பட புதிய மாதிரிகளை அறிமுகம் செய்தாலும் விற்பனையில் முந்த முடியவில்லை.

இதனால் நிறுவனத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஜாப்ஸ் 1985 ல் ஆப்பிலில் இருந்து விலகி நெக்ஸ்ட் கம்ப்யூட்டர் என்னும் தனி நிறுவனத்தை துவக்கினார்.அந்தநிறுவனம் பெரிதாக வெற்றி பெறவில்லை.

அடுத்த பதினோறு ஆண்டுகள் ஜாப்ஸை உலகம் மறந்தே விட்டது. இடைப்பட்ட காலத்தில் வின்டோஸ் சக்கை போடு போட தனது ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பிற நிறுவங்கள் பயன்படுத்த அனுமதிக்காத ஆப்பிள் திண்டாடி தடுமாறியது.

ஆப்பிள் விற்பனை சரிந்து அதன் பங்குகளும் வீழ்ச்சி அடைந்த நிலையில் நஷ்டத்தில் தள்ளாடும் நிறுவனத்தை தூக்கி நிறுத்தும் கடைசி முயற்சியாக மீண்டும் ஸ்டீவ் ஜாப்ஸிடமே ஆப்பிள் தஞ்சமடைந்தது.

ஆனால் ஜாப்ஸால் கூட ஆப்பிளை காப்பாற்ற முடியாது; ஆப்பிளின் காலம் முடிந்து விட்டது என்றே பலரும் நம்பினர்.

இரண்டாவது இன்னிங்ஸ்சின் எழுச்சி..

ஒரு பக்கம் நஷ்டம் இன்னொரு பக்கம் வேறு திசையில் சென்றுவிட்ட கம்ப்யூட்டர் உலகம் என்றசூழ்நிலையில் தான் ஜாப்ஸின் இரண்டாவது இன்னிங்கஸ் ஆரம்பமானது.

ஆப்பிளின் அடிப்படை பலமான நேர்த்தியான வடிவமைப்பு, எளிமையான பயன்பாட்டுத்தன்மை ஆகியவற்றில் கவனம் செலுத்திய ஜாப்ஸ் அசத்தலான ஐமேக் கம்ப்யூட்டர்களை அறிமுகம் செய்து திரும்பி பார்க்க வைத்தார்.

எல்லோரும் கம்ப்யூட்டர்களிலேயே கவனம் செலுத்தி கொண்டிருந்த காலத்தில் யாருமே எதிர்பாராத வகையில் எம்பி3 வடிவில் பாடல்களை கேட்க உதவும் சாதனமான ஐபாடை (iPod) அறிமுகம் செய்தார். அவ்வளவு தான் அமெரிக்காவும் அகில உலகமும் ஐபாடு மூலம் ஆப்பிள் சமானது.

எல்லோரும் காதுகளில் ஐபாடை மாட்டி கொண்டு திரிந்தனர். வாக்மேனுக்கு பிறகு இசை உலகில் பெரும் புரட்சியை ஐபாடு உண்டாக்கியது. இத்தனைக்கும் ஐபாட் முதல் எம்பி3 பிளேயர் அல்ல. அப்போது சந்தையில் பல பிளேயர்கள் இருந்தன. ஆனால் ஐபாடின் எளிமையும் நேரத்தியும் எம்பி3 பிளேயர் என்றால் ஐபாட் என்று சொல்ல வைத்தன.

மற்ற எந்த பிளேயரை விடவும் ஐபாடை கையாள்வது எளிதாக இருந்த்து. விருப்பமான பாடலை தேட பட்டன் பட்டனாக தட்டி கொன்டிருக்காமால் கைவிரல இப்படியும் அப்படியுமாக நகர்த்துவதன் மூலமே பாட்லக்ளை தேர்வு செய்யும் லாவகத்தை ஐபாட் தந்தது.

இந்த எளிமையான வடிவமைப்பு மற்றும் பயன்பாடு தான் ஜாப்சின் தனித்தன்மையாக அமைந்தது.

இன்டெர்நெட்டில் பாடல்களை டவுன்ட்லோடு செய்வது பெரும் பிரச்னையாக உருவான நிலையில் ஜாப்ஸ் பாடல்களை காப்புரிமை சிக்கல் இல்லாமல் வாங்குவதற்கான ஐடியூன்ஸ் இணைய இசை கடையை துவக்கி அடுத்த அஸ்திரத்தை பிரயோகித்து இசைத்துறையை கைப்பற்றினார்.

ஜீனியஸ் ஜாப்ஸ்!

எல்லோரும் ஐபாட் பற்றி பேசிகொண்டிருந்த போது, செல்போன்கள் செல்லும் திசையை புரிந்து கொண்டு ஐபோனை அறிமுகம் செய்தார். டச் ஸ்கிரின் வசதியோடு வந்த அதன் எளிமையும் கம்ப்யூட்டரின் செயல்திறனும் ஐபோனை (iPhone) சூப்பர் ஹிட்டாக்கியது.

பிளாக்பெரி போன்றவை சாதிக்க முடியாததை ஐபோன் சாதித்து. ஸ்மார்ட் போன்களுக்கான சந்தையை உருவாக்கியது. ஐபோன்களுக்கான புதிய செயலிகள் அதனை புதிய உயரத்துக்கு கொண்டு சென்றன.

அடுத்ததாக ஐபேடை (iPad) அறிமுகம் செய்து மைக்ரோசாப்டே மண்ணை கவ்விய டேப்லெட் கம்ப்யூட்டர் சத்தியில் ஆப்பிள் வெற்றிக்கொடி நாட்டியது.

ஐபோனும் ஐபேடும் கம்ப்யூட்டருடன் நாம் தொடர்பு கொள்ளும் விதத்தையே மாற்றி அமைத்துள்ளன. தகவல் தொடர்பிலும் புதிய பாதை வகுத்துள்ள‌‌. இதற்காக தான் ஜாப்ஸ் ஜீனியஸ் என்று கொண்டாடப்படுகிறார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன் ஆப்பிள் தலைவர் பதவியில் இருந்து விலகிய ஸ்டீவ் ஜாப்ஸ், மீளா துயிலில் ஆழ்ந்துவிட்டார். ஆனால், அவர் உண்டாக்கிய கம்ப்யூட்டர் புரட்சி என்றென்றும் நிலைத்து நிற்கும்.

தொழில்நுட்ப உலகம் இன்று துயரத்துடன் உச்சரிக்கும் ஒரே வார்த்தை… iSad

No comments:

Post a Comment