Wednesday, October 31, 2012

Dennis Ritchie (கணினிப் பொறியியல் நாயகர் டென்னிஸ் ரிச்சீ )




டென்னிஸ் ரிச்சீ நளினமான மண்டபத்தைக் கட்டினார். ஸ்டீவ் ஜாப்ஸ் அதற்கு பெயின்ட் அடித்து விற்றார்” - யாரோ.
போன மாதம் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்தது, உலகில் பலரையும் போல் எனக்கும் மிக்க வருத்தமூட்டியது. அவர் மறைவதற்குச் சில நாட்கள் முன்புதான், இதோ, இப்போது இந்தக் கட்டுரையை தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேனே, இந்த ஆப்பிள் மடிக்கணினியை வாங்கினேன். வாங்கிய முதல் நாளிலேயே இதை மிகவும் பிடித்துப் போய்விட்டது. வாங்கும் முன், சில வாரங்களுக்கு ஆப்பிளா($1200)? அல்லது விண்டோஸா($500)? எதை வாங்குவது என மனதில் போராட்டம். விண்டோஸ் கணினி விலையைப் போல இருமடங்கு செலவு செய்து இந்த ஆப்பிள் மடிக்கணினி வாங்குவதைப் பற்றியும், அதனால் தொழில் துறையில் எனக்கு பிரயோஜனப்படுமா என்றும் மண்டையை உடைத்துக் கொண்டிருந்தேன் . ஆனால் ஆப்பிரிக்க நண்பர் ஒருவர் என்னிடம், “எப்போதும் யூனிக்ஸ்- தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவாயே, புது ஆப்பிள் ஆபரேட்டிங் சிஸ்டத்தின் முதுகெலும்பாக இயக்குவது யூனிக்ஸ் (UNIX ) தான் தெரியுமா?” என்றார். அவர் பெரிய நிபுணர் இல்லையென்றாலும், ஆறரை அடி உயரமுள்ளவர் எனபதால் அவரை நான் எதிர்த்துப் பேசவில்லை. பின்பு வலைத்தளத்தில் படித்ததில், அவர் சொன்னது உண்மை என்பது தெரிந்தவுடன், சற்றும் தயங்காமல் இருமடங்கு விலை கொடுத்து ஆப்பிள் கணினியை வாங்கிவிட்டேன்.
ஆப்பிள் கணினியை நான் வாங்கக் காரணம் யூனிக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம். அது மட்டுமில்லை, எனக்கு வேலை கிடைக்கக் காரணமானதும் யூனிக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டமே. ஆக எல்லாப் புகழும் யூனிக்ஸுக்கே. எனக்கு வேலை கிடைக்க யூனிக்ஸ் தவிர இன்னொரு காரணமும் இருந்தது. அது ஒரு கணினி மொழி (programming language). இதோ இதை நான் தட்டச்சு செய்கிறேனே அதுவும், இதோ இந்த எழுத்துக்களை நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரோ அல்லது ஏதோ ஒரு ப்ரௌசரின் மூலம் படித்துகொண்டிருக்கிறீர்களே அதெல்லாமும் நடப்பது இந்த மொழி மூலமாகத்தான். இந்த உலாவிகள் (browsers) மூலம், சொல்வனம் வலைத்தளத்தையோ அல்லது யாஹூ, கூகிள் அல்லது வேறெந்த தளத்தையோ நாம் கிளிக் செய்து திறக்கிற போதெல்லாம், வலைப் பக்கங்களை நம் கணினிக்கு அனுப்பி வைக்கும் சர்வர்களின் இயக்கத்திற்கும், மேலும் பல மென்பொருள்களையும் உருவாக்க உபயோகப்படுவதும், இப்படி எல்லாம் வல்லதுமான மொழி தான்ஸிமொழி (’C’language). இந்தஸிமொழி உள்ளியக்க செயல்திட்ட மொழியாக (Kernel programming language) உதவும் யூனிக்ஸ் இயக்க அமைப்பும் ( Operating system), ‘ஸிமொழியும்தான் என்னுடைய வாழ்வுக்கு வழிகோலின. இவை இரண்டையுமே உருவாக்கிய ஒரு கணினிப் பொறியியலாளருக்கு அஞ்சலியே இந்த குறுங்கட்டுரை.
இந்த யூனிக்ஸ் மற்றும்ஸிப்ரொக்ராமிங் மொழி (C programming language) இரண்டையுமே உருவாக்கிய கணினிப் பொறியியல் நாயகர் டென்னிஸ் ரிச்சீ (Dennis Ritchie) அக்டோபர் 12 ம் தேதி, நியூ ஜெர்ஸி மாநிலத்தில் காலமானார். இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் டென்னிஸ் ரிச்சீயின் பங்களிப்பு ஸ்டீவ் ஜாப்ஸின் பங்களிப்பை விடப் பலமடங்கு அதிகமானது. இன்றைய இண்டர்நெட்டும், தானியங்கி காசாளர் கருவிகளும் (ATM), iPhone முதலான ஸ்மார்ட் ஃபோன்களும், எல்லாவிதமான கணினிகளும், ரெயில்வே, ஏர்லைன்ஸ் ரிசர்வேஷன் சிஸ்டம், வங்கிகளில் வணிகத்திட்டங்கள், அவற்றை உருவாக்க உதவிய சாப்ட்வேர் கருவிகளான ஃபாக்ஸ் ப்ரோ, ஆரகிள் (Foxpro, Oracle) மேலும் பல டேட்டா பேஸ்கள், SAP, Peoplesoft, உலகத்தில் இன்டர்நெட் வலையின் தூண்களாக இருந்து தகவலைப் பாய்ச்சும் router கள், யூனிக்ஸ், ஆப்பிள் மற்றும் விண்டோஸ் ஆபரேட்டிங் ஸிஸ்டம்கள் எல்லாமே டென்னிஸ் ரிச்சீயின் கண்டுபிடிப்பானஸிமொழியை உபயோகித்து உருவாக்கப்பட்டவையே.

டென்னிஸ் ரிச்சீ 1941 ம் வருடம் செப்டம்பர்த் திங்கள், 9 ஆம் நாள் ஆலிஸ்டெர் ரிச்சீக்கும் அவரது மனைவி ஜீன் மக்கீக்கும் முதல் மகனாக நியூயார்க் மாகாணத்தில் பிராங்க்ஸ்வில் (Bronxville ) என்னும் ஊரில் பிறந்தார். ஆலிஸ்டெர் ரிச்சீ, நியூ ஜெர்சீயில் பெல் ஆய்வகத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றியதால், குடும்பம் நியூஜெர்சீக்கு குடிபெயர்ந்தது. அன்பான அன்னை ஜீன் மெக்கீ வீட்டிலேயே இருந்துகொண்டு மகன் டென்னிஸின் வளர்ச்சிக்கு வழிகோலினார்.
டென்னிஸ் ரிச்சீக்கு கவனம் படிப்பில் மட்டும்தான்இவருக்கு உடற்பயிற்சி, விளையாட்டுகளில் கவனம் இல்லை என்பது தாய் மேக்கீக்கு வருத்தம் அளித்தது. ஆனால் இவரே பிற்காலத்தில் தான் உருவாக்கப் போகும்ஸிமொழி மூலம் உலகெங்கும் பல்வேறு கம்ப்யூட்ட கேம்ஸ் உருவாகக் காரணமாக இருக்கப்போகிறார் என்பது அப்போது அவர் தாய்க்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தந்தை வழிச் சொத்தாகக் கூர்மையான அறிவும், தாய் வழிச் சொத்தாக நிதானமும், விஸ்தாரமான சிந்தனைகளும் டென்னிஸ் ரிச்சீக்கு அமைந்திருந்தன. படிப்பில் முனைப்புள்ள ரிச்சீ, 1963ம் வருடம் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் பௌதீகத்தில் மிக உயர்ந்த மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றார். ஹார்வர்டில் மேற்படிப்பைத் தொடர்ந்த அவர் ஹார்வர்ட் பல்கலையின் அந்நாளைய கணினியான யூனிவாக் சிஸ்டத்தைப் பற்றிய விரிவுரையை தற்செயலாக காண நேர்ந்தது.
அந்த எதேச்சையான நிகழ்வு உலகத்தில் பெருமாற்றத்தை ஏற்படுத்தும் என்று எவருக்கும் தெரிந்திருக்காது. (”பௌதீகத்தில் எனக்கு ஞானம் போதாது.. எனக்கு கணிப்பொறிதான் லாயக்குஎன்று முடிவெடுத்ததாக பிற்காலத்தில் ஒருமுறை அவரே கூறியிருக்கிறார்). அந்த விரிவுரையினால் கணினிப் பொறியியலில் முழுமையாக ஈர்க்கப்பட்ட டென்னிஸ் ரிச்சீ ஹார்வர்டில் மேற்படிப்பையும் ஆராய்ச்சியையும் செய்துகொண்டே, உலகத்தின் மிகச்சிறந்த தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான பாஸ்டன் நகரின் MIT யில் அறிவியல் அறிஞர்களுடன் சேர்ந்து கணினியைப் பற்றிய அறிவை, ஆராய்ச்சிகளைப் பகிர்ந்து கொண்டார். அதே நேரத்தில் அவரது தந்தையார் ஆராய்ச்சி புரிந்த பெல் நிறுவனத்தில் இருந்தே ஆய்வுக்கூடத்தில் பணியாற்ற அழைப்பு வந்தது. 1967 ஆம் ஆண்டு டென்னிஸ் ரிச்சீயும் அறிவியலாளராக பெல் ஆய்வகத்தில் சேர்ந்தார். பெல் ஆய்வகத்தில் மற்றொரு பெரும் கணினி அறிஞரான கென்னத் தாம்ப்ஸனுடன் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அறிவுப்பசிக்கு அளவேயில்லாமல் ஹார்வர்டில் படித்துக்கொண்டே பெல் ஆய்வகத்தில் வேலையும் செய்துகொண்டு, MITயிலும் அறிவியலாளர் சந்திப்புக்களில் வாடிக்கையாகக் கலந்து கொண்டார்.
1960-’70 களிலெல்லாம் யானை மாதிரி முழு அறைகளை அடைத்துக் கொண்டு பெரிதாகக் கம்ப்யூட்டர்கள் நின்றுகொண்டிருக்கும். சற்றே வெப்பம் அதிகமானால் உடனடியாக அணைந்துவிடக் கூடிய அவற்றைக் குளிரூட்டப் பல குளிர் பதனிகள் (industrial AC systems) சிங்கம் போல உறுமிக்கொண்டிருக்கும். இடையில் எலி போல நடுங்கிக்கொண்டு மனிதர்கள்பன்ச்கார்டில் ஓட்டை போட்டு புரோக்ராம் எழுத வேண்டிய நிலை. ஒரு ஓட்டை தவறானால் மீண்டும் அட்டையை எடுத்து ஆரம்பத்தில் இருந்து ஓட்டை போட்டு செய்ய வேண்டிய பெருந்தலைவலி. அதற்கு மாற்றாக, ‘மல்டிக்ஸ்என்கிற, பல புரோக்ராம்களை ஒரே நேரத்தில் இயக்கக் கூடிய, பல பொறியாளர்களுக்கு ஒரே நேரத்தில் சேவை செய்யக்கூடிய மிகச் சுலபமான கம்ப்யூட்டரை செய்யும் ஆராய்ச்சியில் கென்னத் தாம்ப்ஸனும் டென்னிஸ் ரிச்சீயும் சில MIT விஞ்ஞானிகளுடன் இணைந்து ஈடுபட்டனர். இதற்கு ஆதாரமான பல ஆராய்ச்சிகளை பெல் நிறுவனத்திலேயே டென்னிஸ் ரிச்சீ மேற்கொண்டார். பணப் பற்றாக்குறையால் பெல் நிறுவனம் இந்த ஆராய்ச்சியை திடீரென்று நிறுத்த இருவரும் துன்பப்பட்டனர். MIT விஞ்ஞானிகளின் வருகையும் நின்று போனது. இருந்தாலும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டதனால் பெற்ற அறிவு வீண்போகவில்லை.
1968 ம் வருடம் ஹார்வர்ட் பல்கலைக் கழகம் டென்னிஸ் ரிச்சீ எழுதிய , செயல்திட்ட வடிவக் கணிப்பு பரிணாமத்தில் (Program Structure and Computational Complexity) “subrecursive hierarchies of functions” என்னும் மிகக் கடினமான ஆய்வறிக்கைக்கு டாக்டர் பட்டமளித்தது . இந்த Computational Complexity என்பது, இன்றைய அளவிலும் நிறைய ஆராய்ச்சி செய்யப்படும் ஒரு கணினித் துறைப் பிரிவு ஆகும். இதில் இன்னும் தீர்வு காணப்படாத கேள்விகள் நிறைய உள்ளன.
பெல் நிறுவனத்தில், மல்டிக்ஸ் பற்செயலியைக் கட்டமைப்பு செய்த பட்டறிவை வைத்து கென்னத் தாம்ப்ஸனும், டென்னிஸ் ரிச்சீயும் கட்டமைப்பின் அடிப்படைக் கூறானஒரே நேரத்தில் பல இயக்கம்செய்யும் முறையை மாற்றி, ஒன்றன் பின் ஒன்றாக பலவற்றை ஒரே நேரத்தில் (டைம் ஷேரிங்) செய்யுமாறு மாற்றி அமைத்தனர்.
இதை விளக்க ஒரு ஒப்பீடு தருகிறேன்: மல்டிக்ஸ் என்பது பத்து இரயில்வே பணியாளர்கள், இரயில் நிலையத்தில் வரிசையில் நிற்கும் பயனாளர்கள் பத்து பேருக்கு உடனடியாக தனித்தனியாக பயணச்சீட்டு விற்பனை, முன்பதிவு செய்தல், தொடர்வண்டி விபரம் சொல்லுதல் என ஒரே நேரத்தில் செய்வது போல; அதை நேரப் பங்கீடு (டைம் ஷேரிங்) முறையாக மாற்றி டென்னிஸ் ரிச்சீ எழுதியது, ஒரே ஒரு இரயில்வே பணியாளர் பத்து பிரயாணிகளுக்கும் இருக்கும் நேரத்தைப் பகிர்ந்து சேவை செய்வது போல. எப்படி என்றால் முன்பதிவுக்கு வண்டியில் இருக்கை உள்ளதா என ஒருவருக்குப்ப பார்த்து சொல்லிக் கொண்டே, இன்னொருவருக்குப் பதிவுச் சீட்டை அச்சடிக்க பிரிண்டரை முடுக்கிவிட்டு, வேறொருவருக்கு மீதம் சில்லறை கொடுத்தல், வேறொருவருக்கு சீசன் டிக்கட் விலையை சொல்லுதல், இரயில்களுக்கு சிக்னல் மாற்றுதல், மற்றொருவருக்கு முன்பதிவு செய்தல் போல. இதன் மூலம் குறைந்த செலவில் ஒரே ஒரு இரயில்வே அலுவலர், பிரயாணிகளில் யாரையும் காக்க வைக்காமல் பலருக்கு சேவை செய்ய முடிகிறதல்லவா? இதைச் சொல்வது எளிது, ஆனால் கணினியில் பல செயல்திட்டங்கள் ஓடிக் கொண்டிருக்கும் போது, ஒவ்வொன்றின் சம்பந்தமில்லாத தருணத்தையும், நிகழ்ச்சி, பயனாளர் உள்ளீடு ஆகியவற்றையும் கணினியின் நினைவில் பதித்துப் பின் விட்ட நிலையில் இருந்து மிகத் துல்லியமாக இயக்கத்தைத் தொடர வைக்க ப்ரோக்ராம் எழுதிச் சாதிப்பது அரிய செயல். இதைச் செய்ய, memory swap, context switch, virtual memory, process management, pre-emptive timesharing என மிகக் கடினமான பல வேலைகளைக் கோர்த்து புரோக்ராம் செய்தார் டென்னிஸ் ரிச்சீ.
ரிச்சீயின் உழைப்பு அசாத்தியமானது. நற்பகலுக்குச் சற்றுமுன்பு ஆய்வுக்கூடத்துக்கு வருவார். பொதுவாக யாருடனும் அரட்டை அடிக்காமல் வேலை செய்வார். மாலை ஏழு மணிக்கு வீட்டுக்கு திரும்புவார். அவர் வீட்டிலிருந்தே பெல் ஆய்வகத்திற்கு தொலைதொடர்பு (dedicated line) வழி செய்யப்பட்டிருந்தது. அதன் வழியாக இரவில் மீண்டும் வேலை செய்ய ஆரம்பிப்பார். நள்ளிரவு தாண்டியும் தூங்காமல் வேலை செய்து விடிகாலை மூன்று மணிக்கு படுக்கச் செல்வார். இந்த அரிய உழைப்புக்குத் தக்க பெரும்பலன் இருந்தது. இதில் உருவான புதிய ஆபரேடடிங் ஸிஸ்டம் பல பயனாளர்களையும், பல பொறியாளர்களையும் ஒரே நேரத்தில் வேலை செய்ய அனுமதித்தது மட்டுமின்றி, தகவல்களையும், கோப்புகளையும் ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்து குழுவாக ஒருங்கிணைந்து வேலை (team work) செய்யவும் வழிகோலியது.
இதை டென்னிஸ் ரிச்சீயூனிக்ஸின் காலப் பங்கீட்டு அமைப்பின் பரிணாமம்’ (”The Evolution of the UNIX Time-sharing System”) என்ற தலைப்பு கொண்ட ஆய்வுக்கட்டுரையாக வெளியிட்டபோது, கணினி ஆய்வாளர்களிடையே பெரிதும் வியந்து பேசப்பட்டது. ரிச்சீ இதன் மூலம் கணினியின் அளவைக் குறுக வைத்தும், விலையைச் சிறுக வைத்தும் மிகப்பெரும் மாற்றத்தை உருவாக்கக் காரணமானார். யூனிக்ஸின் பரிணாமம் (”Evolution of the UNIX “) என்பது யூனிக்ஸால் புரட்சி (”Revolution of the UNIX”) என்னும் அளவுக்கு கணினியைப் பற்றிய புதிய பரிமாணத்தையும் சாத்தியக்கூறுகளையும் உருவாக்கிக் கணினி யுகத்தில் புரட்சிக்கு வித்திட்டது.

இந்த யூனிக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் சிறப்பாக வேலை செய்ததால், பல வித கணினிகளுக்கு ஏற்றாற்போல் இதை எழுத முடிவானது. ஆனால் இவ்வாறு எல்லாவிதமான கணினிகளுக்கும் மாற்றி எழுதுதல் சாதாரண விஷயம் அல்ல. பலவித மைக்ரோ சிப்கள், பல வித வன்பொருட்கள் (ஹார்ட்வேர்), பல வித கட்டமைப்புகளுக்கு ஏற்றாற்போல் பலவித தொகுக்கும் (அசெம்ப்ளி) மொழிகளில் மீண்டும் மீண்டும் மாற்றி எழுத நேரும். அந்த நேரத்தில் ஒரு அற்புத வழி டென்னிஸ் ரிச்சீக்கு தோன்றியது. வெவ்வேறு விதமான கணினிகளுக்கு ஏற்றாற்போல் ஒரே மொழி இருந்தால், அந்த ஒரு மொழியில் எழுதப்பட்ட ஒரு ஆபரேட்டிங் சிஸ்டம் செயல் தொகுப்பு எல்லாவற்றிலுமே வேலை செய்ய முடியும் என்பதுதான் அது. இதற்காக அவர் ஒரு புதிய மொழியையே உருவாக்க முயற்சிசெய்தார். ஏற்கனவே இருந்த ’B’ என்ற மொழியின் கட்டமைப்பைப் போன்ற முறைக் கட்டமைப்புடன், ஆனால் எளிதாகவும், வேகமாகவும், எல்லாப் பொறிகளுக்கும் (ஹார்ட்வேர்) பொதுவாகவும் அதே மிக லாவகமாக வன்பொருட்களுடன் (ஹார்ட்வேர்) கட்டளைப் பரிமாற்றம் செய்யும் வகையில் கீழ் நிலை மொழியாகவும் (low level language) அந்த மொழி அமைந்திருந்தது. அதற்கு ’C’ மொழி எனப் பெயரிட்டார். ஸி மொழியின் மிகக் குறைந்த கீ வேர்ட்கள், சிறிய அளவிலான கட்டளைகள், கணினியின் உள்ளியக்கத்துக்கும், சிப்களின் மெமரிக்கும் தகுந்த வகையிலும் மிக நேரடியான இயக்கக் கோவைகள் (instruction mapping ) ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு, கணினிப் பொறியாளர்கள் மத்தியில், ஸி மொழியைவேகமாக இயங்கக் கூடிய, எளிதான (light and efficient), சிறந்த மொழிஎனப் புகழ் பெற வைத்தன. ஸி மொழி கணினிப் பொறியாளர்களின் இதயத் துடிப்பு அல்லது ” language at the heart of programming” என சிலாகித்துப் பேசும் வகையில் புகழ் பெற்றது. பலர் கேட்டுக்கொண்டதின் பேரிலும், பெல் நிறுவன சக தொழிலாளரான ப்ரையன் கெர்னிகனின் (Brian Kernighan)  நச்சரிப்பு தாங்காமலும், எல்லாரும் புரிந்துகொள்ளும் வண்ணம்ஸிமொழிக்கு விளக்கப் புத்தகம் ஒன்றை (”The C programming language“) எழுதினார் டென்னிஸ் ரிச்சீ. அதை ஸி மொழி போலவே மிகக் கச்சிதமான புத்தகமாக எழுதினார். இந்தப் புத்தகம் கணினி அறிவியல்/ பொறியியல் புத்தகங்களிலேயே மிக அதிக அளவில் விற்று சாதனை படைத்தது. பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பெற்றது :

இப் புத்தகத்தின் ஆசிரியர்கள் பெயர்களில் தன் பெயருக்கு முந்தி கெர்னிகனின் பெயர் வருமாறு அமைக்கும் தாராள மனது கொண்டிருந்த செம்மல் டென்னிஸ் ரிச்சீ. இந்தப் புத்தகத்தில், பல பயனாளர் ஆபரேட்டிங் சிஸ்டமான யூனிக்ஸின் பயனாளர் அனைவருக்கும் முகமன் தெரிவிப்பது போல் வரும் முதல் செயல்திட்டமான (சாம்பிள் ப்ரோக்ராம்) ,
main()
{
printf(”Hello World\n”);
}
கிட்டத்தட்ட உலகின் எல்லா கணினிப் பொறியாளர்களாலும் பயிற்சிக்காக எழுதப்பட்டதாகும். இதுவே ஜாவா, C++ இன்னும் பல மொழிகளின் புத்தகங்களிலும் முதல் பாடமாக இன்றும் அரிச்சுவடி போல் பின்பற்றப் படுகிறது. பிள்ளையார் சுழி போடுவது போல், புதியதாக கம்ப்யூட்டரில் எதைச் செய்வது என்றாலும்ஹலோ வேர்ல்ட்சொல்லித்தான் கல்வியாளர் பலர் இன்று ஆரம்பிக்கும் அளவுக்கு இது ஒரு குதூகலமான அடையாளச் சின்னமாக பயன்படுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!
பீட்டில்ஸ் இசைக்குழுவினர் பாடிய ‘Let it be’ பாட்டை வைத்து ‘Write in C’ என்ற பாட்டு கூட, C மொழியைக் காதலித்த பொறியாளர்களால் கொண்டாட்டமாக எழுதப்பட்டது :http://www.youtube.com/watch?v=1S1fISh-pag
டென்னிஸ் ரிச்சீயின் கண்டுபிடிப்புக்கள் மூலமாகத்தான் இன்று பல மென்பொருள்கள், கணினி இணையம், வலைத்தளங்கள், கைபேசிகள் எல்லாமே வேலை செய்கின்றன என்றாலும், அவரது கண்டுபிடிப்புகள் அவருக்கு கோடிக் கணக்கில் பணத்தை அள்ளிக் குவிக்கவில்லை. அதற்குக் காரணம், ஸ்டீவ் ஜாப்ஸ் அல்லது பில் கேட்ஸ் போலல்லாது, இவரின் கண்டு பிடிப்புக்களை (ஓபன் ஸோர்ஸ்) முறையில் இவர் இலவசமாகவே எல்லாருக்கும் வழங்கினார்! இவ்வாறு இலவசமாக வழங்காமல் காப்புரிமை வாங்கியிருந்தாரெனில் ஆப்பிள், மைக்ரோசாப்ட், ஆரக்கிள், ஐபிஎம் உட்பட உலகின் பல பில்லியன் டாலர் கம்பெனிகள் இவருக்கு கப்பம் கட்ட வேண்டியிருக்கும். உலகின் மிகப் பெரும் தனிகர்களில் இவர் ஒருவராக இருந்திருப்பார். இவ்வளவு ஏன், அமெரிக்க இராணுவமே இவருக்கு பலகோடி டாலர்கள் கொடுக்க வேண்டி இருந்திருக்கும்.
இந்த ஓபன் ஸோர்ஸ் (திறந்த மூலம்) என்பதன் அடிப்படை, கண்டு பிடிப்பவர்கள், அதன் பயனை மனிதகுலம் முழுதும் அடையும் வண்ணம், காப்புரிமைப் பதிவு செய்யாமல், தனி நபர் சொத்தாக ஆக்கி வேலிக்குள் அடைக்காமல், பயன் உரிமைக்குக் கட்டணம் கேட்காமல், இலவசமாக, திறப்பிலிருக்கும் பொருளாக வழங்கல் வேண்டும், அந்தக் கண்டுபிடிப்பை மேன்மேலும் சுத்திகரித்து, கூர்மையாக்கி, மேம்படுத்திப் பிற கண்டுபிடிப்புகளை செய்வோரும் வெளிப்படையாக வழங்கவேண்டும் என்பதே. இதன் மூலம் கண்டுபிடிப்பாளருக்கு பல கோடிகள் வரவு குறைந்தாலும்வேறு பல ஆராய்ச்சியாளர்கள் இவரின் அனுமதிக்காகப் பல மாதம் காத்திராமல், செலவில்லாமல் தரவிறக்கி, எளிதாக பரீட்சார்த்தமாகவும், பின்பு தேவைக்கு ஏற்றபடியும்  பயன்படுத்திப் பல ஆராய்ச்சிகளையும் கண்டுபிடிப்புக்களையும் செய்வதன் மூலமும் மனிதகுலத்துக்கு பெரும் லாபங்களே கிட்டும் என்பது கருத்து. பலகோடிப் பணச் செலவில் கிடைக்க வேண்டிய கருவிகளையும் குறைந்த செலவில், மிகக் குறுகிய காலத்தில் சமூகமும், மனித குலமும் பெற வழி வகுக்கும் என்பதே.
ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டதை ஆரம்பத்திலிருந்து மீண்டும் செய்ய வேண்டிய அவசியம் இல்லாதது மட்டுமின்றி பலரும் பங்கேற்கலாம். இதனால் முதல் கண்டுபிடிப்பாளர் செய்த கருவியை, வேறு கண்டுபிடிப்பாளர்கள் பலர் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப மேலும் செப்பனிட்டு நேர்த்தியாக்கலாம், இருப்பதை விட துரிதமாக, துல்லியமாக இயங்கவைக்கலாம்; உதாரணத்துக்கு ஆரக்கிள் நிறுவனம் எவரின் அனுமதிக்காககவும் காத்திராமல் யூனிக்ஸ் ஓபன் ஸோர்ஸ் லைப்ரரி, ஸி மொழி இரண்டையுமே பயன்படுத்தி தன் ஆரக்கிள் தொகுப்புக்கு (oracle package) தகுந்த வகையில் டைம் ஷேரிங், மெமரி ஹேண்ட்லிங் ஆகியவற்றை மாற்றி எழுதிக்கொண்டது. ஸிஸ்கோ நிறுவனம் ரௌட்டர்களுக்குத் தோதான வகையில் யூனிக்ஸுக்கு எழுதப்பட்ட ஸி மொழி லைப்ரரிகளை non -pre -emptive ஆக மாற்றி எழுதிக்கொண்டது. மொத்த ஸிஸ்கோ இன்டர்நெட் ஆபரேட்டிங் சிஸ்டத்தையுமே ஸி மொழியில் எழுதியது. BEA நிறுவனம் ஜாவா சர்வர் புரோகிராம்களை இயக்கும் weblogic server- தடங்கல் இல்லாமல் ஸி மொழி கொண்டு எழுதியது. ஆப்பிள் நிறுவனம் ஸி மொழியைச் சற்றே நீட்டி ஆப்ஜகடிவ் ஸி (Objective-C ) என்று புது மொழியை உருவாக்கி -மாக், -பேட், -ஃபோன் ஆகிய கருவிகளில் உபயோகிக்கிறது. யூனிக்ஸைச் சற்றே மாற்றிடார்வின் கெர்னல்எழுதி ஆபரேட்டிங் சிஸ்டம்களில் பயன்படுத்துகிறது. பழைய ஆப்பிள் வன்பொருட்களில் இருந்து தற்போதைய அதிவேக இன்டெல் வன்பொருட்களுக்கு ஆபரேட்டிங் சிஸ்டத்தை எளிதாக ஆப்பிள் நிறுவனம் பெயர்த்து எழுத முடிந்தமைக்கு காரணமே ஸி மொழியில் ஆப்பிளின் ஆபரேட்டிங் சிஸ்டம் எழுதப்பட்டு இருந்ததுதான். வேறு ஏதாவது மொழியில் எழுதப்பட்டு இருந்தால் இந்த பெயர்ச்சி பெரும் திண்டாட்டமாகி இருந்திருக்கும். ஆப்பிள் தவிர்த்த இந்தத் தகவல்கள் எல்லாமே நான் நேரிடையாக ஆரக்கிள், மைக்ரோசாப்ட், ஸிஸ்கோ, BEA முதலிய நிறுவனங்களின் பொறியிலாளர்களிடம், அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்துகொண்டதாகும். தேர்ந்த வகையில் எந்த தனியார் நிறுவனத்தின், நாட்டின் அதிகாரத்துக்கும் உட்படாமல் ஆராய்ச்சியாளரின் பயனை அனைவரும் உபயோகம் செய்யலாம் என்பதும் ஓபன் ஸோர்ஸின் சிறப்பு. உதாரணத்துக்கு ஜாவா ஓபன் ஸோர்ஸ் ஆகையால், இந்தியா அணு சோதனை நடத்தினால், ஜாவா புரோக்ராம்களை இந்தியா உபயோகம் செய்யலாகாது என அமெரிக்காவால் தடை விதிக்க இயலாது. ஏகாதிபத்திய நோக்கம் கொண்ட எந்த நாடும் உலக நாடுகளில் ஏழை, பாழை நாடுகளை மிரட்டி ஓப்பன் ஸோர்ஸில் அமைந்த பொருட்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க முடியாது.
எதிர்மாறான உதாரணமாக, ஓபன் ஸோர்ஸ் இல்லாத கடுமையான லைசென்ஸ் விதிக்கு போஃபார்ஸ் பீரங்கி அல்லது மிக்/ எஃப் 16 விமானங்களைச் சொல்லலாம். இவற்றைப் பிரித்து ஆராய்ச்சி செய்ய மூலத் தயாரிப்பு நாடுகளை/ நிறுவனங்களைத் தவிரப் பிறருக்கு அனுமதி இல்லை. இவற்றைப் பயன்படுத்த குண்டுகளையும், தளவாடங்களையும் முதலில் கருவியை விற்ற நிறுவனத்திடமிருந்தே வாங்கவேண்டும். அந்த நிறுவனங்கள் இருக்கும் நாடுகள் நிறுவனங்களை கட்டுப்படுத்துமானால், நிறுவனம் சார்ந்த நாடுகளை எதிர்க்க நம் ராணுவத்துக்கே திராணி இல்லாமல் போய்விடும். இதில் தெரியும் ஓபன் ஸோர்ஸின் உயர்வு.
ஆம், செலவு செய்யத் தேவை இல்லாத திறந்த பாதையான ஓப்பன் ஸோர்ஸ் என்பதில் தனி நபரின் வாழ்வு அதிவேகமாக உயர்வது மட்டுப்பட்டு, அதற்குப் பதில் பெருஞ்சமுதாயத்தின் உயர்வு துரிதப்படுத்தப் படுகிறது என்பது உண்மைஇதை ஏற்று இதன் வழி ஒழுகுவதற்கு ஒரு வகை சமூக விழிப்புணர்வு வேண்டும். அது ரிச்சீயிடம் இருந்ததுஅவர் வழி இன்றும் செல்வாரிடமும் இதுவே செயல்படுகிறது.

இப்படி வெளிப்படையாக ஓப்பன் ஸோர்ஸில் வழங்கியதால் டென்னிஸ் ரிச்சீக்கு  கோடிகளில் பணம் புரளவில்லையே தவிர ரிச்சீயைப் பல விருதுகள் தேடி வந்தன. அறிவியலில் நோபல் பரிசுக்கு சமானமாகக் கருதப்படும் கம்ப்யூட்டர் துறையின் விருதானட்யூரிங் விருது” 1983 ம் ஆண்டு இவருக்குக் கிடைத்தது. IEEE பொறியாளர் கூட்டமைப்பு 1990ரில்ஹாம்மிங்மெடல் வழங்கி கௌரவித்தது. 1997 இல் கலிபோர்னியாவின் கம்ப்யூட்டர் மியூசியத்தில் தாம்ப்சன் மற்றும் ரிச்சீயின் பெயர்கள் “fellows of the computer museum 1997″ ஆக அறிவிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் 1999 ல்நேஷனல் மெடல் ஆப் டெக்னாலஜிவிருதை ரிச்சீக்கும் தாம்ப்ஸனுக்கும் வழங்கினார். அந்நிகழ்ச்சியில் முதலில் தாம்ப்ஸனை பதக்கம் முதலில் தாம்ப்ஸனை வாங்கச் சொல்லிவிட்டு, பிறகு தானும் வாங்கிக்கொண்டு சற்றும் அலட்டிக்கொள்ளாமல் கிளிண்டனுக்குக் கைகொடுத்து இருக்கையில் சென்றமர்ந்தது சுவாரஸ்யமான காட்சி :
பலரையும் போல் கூட்டத்தைக் கண்டவுடன் மைக்கைப் பிடித்துப் பேருரையாற்றாமல், விருதை வாங்கிக்கொண்டு சம்பிரதாயமாக நன்றி பாராட்டிவிட்டு அமைதியாகத் திரும்பி வந்து அன்றே மீண்டும் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர் ரிச்சீ. இவரின் வாழ்நாளின் கடைசி ஆண்டான 2011 ல் கூட ஜப்பானிய அரசு இவருக்கு அறிவியல் மூலம் மனிதகுலத்திற்கு அளப்பரிய நன்மை செய்ததற்கான விருதானஜப்பான் பரிசுகொடுத்து கௌரவித்தது. ஒவ்வொரு துறைக்கும் தனியாக வழங்கப்படும் நோபெல் பரிசு போலன்றி, எல்லா அறிவியல் தொழில்நுட்பத் துறைகளுக்கும் சேர்த்து வருடத்துக்கு ஒரிருவருக்கே வழங்கப்படும் கௌரவம் மிக்க இவ்விருது இரண்டரை கோடி ருபாய் பரிசுப்பணமும் கொண்டது.
பல கணினியியல் சாத்தியக்கூறுகளை தோற்றுவித்து, பல லட்சம் பொறியியலாளருக்கு ஓபன் ஸோர்ஸ் மூலம் வேலை வாய்ப்புக் கிடைக்கச் செய்து, எல்லாருக்கும் எண்ணற்ற வளங்களை வாரி வழங்கிய அறிவு வள்ளல் டென்னிஸ் ரிச்சீ, 71 ம் வயதில் அக்டோபர் 12 ம் தேதி பெர்க்லி ஹில்சில் இருக்கும் அவரது வீட்டில் தனிமையில் காலமானார். சமீபகாலமாக அவர் உடல் நலம் குன்றி இதயக் கோளாறு, பராஸ்ட்ரேட் கேன்சரினால் அவதிப்பட்டிருந்தார்.
எளிமையாய் வாழ்ந்து, எளிமையாகப் பெரும் கண்டுபிடிப்புகளைச் செய்து, எளிமையாய் விடைபெற்ற டென்னிஸ் ரிச்சீக்கு என் கனக்கும் இதயத்துடன் எளிமையான அஞ்சலி:
main()
{
printf (”Thank you Dennis Ritchie \n Good bye \n”);
}
___________

பின்குறிப்பு:
இவர்பெற்ற பல விருதுகள் :
1968 Doctorate, Harvard University
1974 ACM award for the outstanding paper in systems and languages
1982 IEEE Emmanuel Piore Award
1983 Bell Laboratories Fellow
1983 Software Systems Award, ACM
1983 Turing Award , ACM
1989 C&C Foundation award, NEC
1990 Hamming Medal , IEEE
1999 National Medal of Technology, U.S. Federal Government
2011 Japan Prize for Information and Communications,  Government of Japan

No comments:

Post a Comment